திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டையை அகற்றுவோம்: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!


வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified திங்கள், 20 ஏப்ரல் 2015 (12:41 IST)
திராவிடர் கழகத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
 
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "பெண்கள் அணியும் தாலி என்பது தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம். ஒரு குறிப்பிட்ட மதச்  சின்னம் அல்ல. எல்லா மதத்திலும் தாலி அணியும் வழக்கம் உள்ளது. எந்தக்  குடும்ப பெண்ணும் தாலியை அடிமைச்சின்னமாக நினைப்பதில்லை. அன்பின் அடையாளமாக, புனிதச்சின்னமாகத்தான் கருதி வருகிறார்கள்.
 
கலாச்சாரத்தின் காவலர்கள் என்று பேசிக் கொண்டு தாலியை அகற்ற வேண்டும் என்று பேசியதன் மூலம் தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள். அவர்களது இந்த கலாச்சார தாக்குதலுக்கு எந்தத்  தரப்பும் ஆதரவு கொடுக்கப்போவதில்லை.
 
பெண்களுக்கு எதிரான, கலாச்சாரத்துக்கு எதிரான தாக்குதலை நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து திராவிட கட்சிகள் கண்துடைப்பு நாடகம் ஆடுகின்றன. கி.வீரமணியைக்  கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
கருப்பு சட்டை அணிவது அவர்கள் உரிமை என்றால் தாலி அணிவது இவர்கள் உரிமை. கருப்பு துணி என்பது துக்க நிகழ்ச்சிக்கு அடையாளமாக அணிவது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்க கூடாது என்று பெண்கள் வெகுண்டெழுந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்?
 
நம்பிக்கை சார்ந்த விசயங்களில் தலையிட்டால் தமிழகம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும். தமிழகத்தில் பாஜக -வை முதன்மை கட்சியாக மாற்ற கட்சியை பலப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 
விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள தமிழகத்தின் மீது அகில இந்திய தலைமை தனிக்கவனம் செலுத்தி வருகிறது. நிச்சயமாக மக்களின் நம்பிக்கையை பெற்று பலம் வாய்ந்த மாற்று சக்தியாக பாஜக மாறும்" என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :