வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2016 (11:05 IST)

ராஜீவ்காந்தி கருப்பா, சிவப்பா? என்று கூட எங்களுக்கு தெரியாது - நளினி

ராஜீவ்காந்தி கருப்பா, சிவப்பா? என்று கூட எங்களுக்கு தெரியாது - நளினி

’’ராஜீவ்காந்தி கருப்பா, சிவப்பா? உயரமா, குள்ளமா? என்று கூட எங்கள் 7 பேருக்கும் தெரியாது என்று ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி கூறியுள்ளார்.
 

 
1991ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
 
இந்நிலையில், நளினியின் தந்தை சங்கர நாராயணன் (92), நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகில் உள்ள அம்பலவாணபுரத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
 
அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று 11 மணி நேரம் பரோலில் செல்வதற்கு நளினிக்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி போலீசார் பலத்த பாதுகாப்புடன் நளினி தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 
 
பின்னர் அவர் அளித்த பேட்டியில், ’’ராஜீவ்காந்தி கருப்பா, சிவப்பா? உயரமா, குள்ளமா? என்று கூட எங்கள் 7 பேருக்கும் தெரியாது.  நாங்கள் அப்பாவிகள். எங்களுக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லாமலேயே 25 வருடங்களாக சிறையில் இருக்கிறோம். இதுதான் உண்மை. நீங்கள் நம்பினால் நம்புங்கள்.
 
நானும் என் கணவரும் மற்ற 5 சகோதரர்களும் தமிழக அரசை நம்பியிருக்கிறோம். விடுதலை செய்வார்கள் என்ற நாளை எதிர்ப்பார்த்திருக்கிறோம்.
 
எனது மகளுக்கு இப்போது 24 வயது ஆகிறது. அவளுக்கு திருமணம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான விசயங்களில் ஈடுபட, இந்த நேரத்தில் கூட விடுதலையாக முடியவில்லை. அவள் என்ன குற்றம் செய்தாள்?’’ என்று அவர் கேள்வி எழுப்பினார்