1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 1 பிப்ரவரி 2015 (17:26 IST)

கழிவுநீர் தொட்டி இடிந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே “சிப்காட்” வளாகத்தில் கழிவுநீர் தொட்டி இடிந்து உயிரிழந்த 10 தொழிலாளர்களினன் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்ததியுள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
ராணிப்பேட்டை அருகே “சிப்காட்” வளாகத்தில், நேற்று நள்ளிரவு கழிவு நீர் சேமிப்புத் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்து வெளியேறிய கழிவு நீரில் மூழ்கி மூச்சடைத்து, பத்து தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற பதைபதைக்கும் செய்தி வெளிவந்துள்ளது.
 
கொடுமையான இந்தச் சம்பவத்துக்குக் காரணம், தனியார் நிர்வாகத்தின் அலட்சியமே என்று புகார் கூறப்படுகிறது. தொழிலாளர்கள் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த புதிய கழிவு நீர்த் தொட்டி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு சட்ட ரீதியாகப் பெறப்பட வேண்டிய அனுமதி எதுவும் பெறப்படாமல் சட்டத்திற்குப் புறம்பாகக் கடந்த ஆறு மாத காலமாக இந்தக் கழிவு நீர்த் தொட்டி செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது.
 
மேலும், கட்டப்பட்டுள்ள இந்தத் தொட்டி சுத்திகரிக்கப்பட்ட திடக்கழிவினைச் சேமித்து வைப்பதற்காகக் கட்டப்பட்டது. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட திடக் கழிவினைச் சேமித்து வைப்பதற்குப் பதிலாக, சுத்திகரிக்கப்படாத திரவ வடிவிலான கழிவினைச் சேமித்து வைத்திருக்கிறார்கள்.
 
அந்தத் தொட்டியில் கொட்டப்பட்டு வந்த தோல் கழிவான “குரோமிக் ஆசிட்”, காங்கிரீட் சுவரை அரித்துள்ளதை, அண்மையில் தொழிலாளர்கள் கண்டறிந்து, நிர்வாகப் பொறுப்பாளர்களிடம் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால் நிர்வாகம் அதனைக் காதில் போட்டுக் கொள்ளாமல் ஏனோதானோ என இருந்து விட்டது.
 
கழிவு நீர்த் தொட்டியில் உட்புறத்தில், பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்டு, அதில் கழிவு நீரை கொட்டி வைத்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான அழுத்தம் காரணமாகத் தொட்டி உடைந்திருக்கிறது. இந்தப் பேரழிவிற்கும் பத்து பேருடைய சோகச் சாவுக்கும் காரணம் இந்த தனியார் நிறுவனமும், அதற்கு உடந்தையாக கடந்த சில மாதங்களாகவே வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த இந்த அரசும்தான் என உள்ளூர்ப் பொது மக்களாலும் அனைத்துக் கட்சியினராலும் குற்றம் சாட்டப்படுகிறது.
 
சம்பவம் நடைபெற்று பத்து பேர் உயிரிழந்த பிறகுதான் தமிழக அரசு திடீரென விழித்துக் கொண்டு, தங்கள் மீது எங்கே பழி விழுந்து விடுமோ என அஞ்சி, அமைச்சர்களும், அதிகாரிகளும் அவசர அவசரமாக அங்கே சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவசரப்பட்டு இதற்காக நிவாரண நிதியினைத் தன்னிச்சையாகவே அவராகவே அறிவித்து விடுவாரோ என்பதற்காக, இறந்து போனவர்களின் குடும்பத் திற்குத் தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் எனப் பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.
 
மறைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்கள் பத்து பேருடைய அகால சாவுக்குக் காரணமான சூழ்நிலைகள் குறித்து அரசு முழுமையான விசாரணைக்கு ஏற்பாடு செய்து உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, அவர்களுக்கு அரசின் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை மிகக் குறைவாக இருப்பதால், குறைந்த பட்சம் குடும்பம் ஒன்றுக்கு பத்து லட்சம் ரூபாயாவது வழங்க வேண்டுமென்றும் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.