வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2016 (11:59 IST)

சுய உதவிக் குழுக்கள் மூலம் கருப்புப் பணம் மாற்றமா?

அதிக அளவில் 500, 1000 ரூபாய் தாள்களை வைத்திருப்போர் அதை மாற்றுவதற்கு மகளிர் சுய உதவி குழுக்களை பயன்படுத்துவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

செவ்வாய்கிழமை [08-11-16] பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருப்புப் பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 30ஆம் தேதி வரை பழைய நோட்டுகளை மாற்ற அவகாசம் கொடுத்திருக்கிறது. இதன்மூலம் வரி செலுத்தாமல் கணக்கில் வராத பணங்களை மாற்றும் போது அவர்கள் மாட்டிக் கொள்வார்கள்.

இதனால் பலர் ரூபாய் நோட்டுகளை மூட்டையாக மூட்டையாக குப்பைகளில் தூக்கி போட்டு வருகின்றனர். மேலும், உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களிடம் உள்ள பணத்தை நகையாக மாற்றும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கினர்.

சிலர், பணம் அற்ற ஏழை மக்களிடம் கொடுத்து அதை அவர்கள் தங்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி, பிறகு அதை புதிய நோட்டுகளாக மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், 500, 1000 ரூபாய் தாள்களை அதிக அளவில் வைத்திருப்பவர்கள், மகளிர் சுய உதவிகுழுக்களை நாடத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஒரு மகளிர் சுய உதவிக் குழுவில் சுமார் 50 பேர் இருக்கிறார்கள் என்றால் ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட தொகை கொடுப்பதாகவும், அதை அவர்கள் வங்கிக்கு சென்று பழைய நோட்டுகளை புதியதாக மாற்றி கொடுப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

மேலும், அவ்வாறு மாற்றித் தருபவர்களுக்கு குறிப்பிட்ட தொகை எவ்வளவோ அதற்கு 20 சதவீதம் கமிஷனாக தரப்படுவதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் இதே மாதிரி கறுப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.