1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 9 அக்டோபர் 2016 (17:45 IST)

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை! - குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

தென்மேற்கு பருவ மழை காலங்களில் சென்னையில் போதிய மழை இல்லாததால் ஏரிகளுக்கு குறைவான அளவே மழை நீர் கிடைத்தது.
 

 
இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
 
ஆந்திராவில் இருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா தண்ணீரும் 4 மாதமாக வராததால் பூண்டி ஏரி நீர் மட்டம் வேகமாக குறைந்து விட்டது. வெப்பச் சலனம் காரணமாக பெய்யும் மழையும் எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் அனைத்து ஏரிகளிலும் நீர்மட்டம் குறைந்து விட்டது.
 
3231 மில்லியன் கன அடி கொள்ளளவு உடைய பூண்டி ஏரியில் இப்போது 172 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதேபோல் 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 641 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
 
இங்கிருந்து தான் தினமும் சென்னைக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. தற்போது வீராணம் ஏரி தண்ணீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவை மூலம் பெறப்படும் தண்ணீர்தான் சென்னை குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்கிறது.
 
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடுமாறு ஆந்திர அரசுக்கு தமிழக அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.