செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2015 (07:42 IST)

விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கரைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சித் தலைவர்

அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் நந்தகுமார் கூறியுள்ளார்.
 
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்றதுமான சிலைகள் இருக்க வேண்டும்.
 
மேலும், கிழங்கு மாவு, மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்கள் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.
 
இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கலாம். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி கிடையாது.
 
கடலோரங்களில் சிலைகளை கரைக்காமல் கடலினுள் குறைந்தது 500 மீட்டர் தூரம் எடுத்துச் சென்று அரசினால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் கரைக்க வேண்டும்.
 
சிலைகளை கரைப்பதற்கு முன்பு சிலை மீது போடப்பட்ட பூ மற்றும் துணிகளை தனியே எடுத்துவிட வேண்டும். பூக்களை ஒன்று சேர்த்து நகராட்சி மற்றும் உள்ளாட்சிப் பகுதிகளில் மக்கும் குப்பையிலும், பிறவற்றை மக்காத குப்பையிலும் கொட்ட வேண்டும்.
 
துணிகளை ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கு கொடுக்கலாம். எக்காரணம் கொண்டும் சிலை கரைக்கும் இடங்களில் குப்பைகளை எரிக்கவும், நீர் நிலைகளில் கொட்டவும் அனுமதி கிடையாது.
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழமுந்தல் கடலில் வாலிநோக்கம் மற்றும் நரிப்பையூர் சிலைகளும், தொண்டி சிலைகள் மகாசக்திபுரம் கடலிலும், ஆர்.எஸ்.மங்கலம் சிலைகள் உப்பூர் கடற்கரையிலும், திருப்பாலைக்குடி சிலைகள் ஆட்டான்குடி ஆற்றிலும், உச்சிப்புளி சிலைகள் தர்கா வலசை கடலிலும் மற்றும் வைகை ஆறு, கடல், நீர் நிலைகளிலும் கரைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 
 
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளைக் கரைத்து விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.