1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : சனி, 5 டிசம்பர் 2015 (22:37 IST)

அதிமுகவினர் சீன் போடுகிறார்கள், இந்த பிழைப்பு தேவைதானா: விஜயகாந்த்

அதிமுகவினர் வெள்ள நிவாரண பணியில் அரசியல் ஆதாயம் தேடி, சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இப்படி ஒரு பிழைப்பு தேவைதானா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ பகுதியில் நான் வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டு வரும்போது, அதிமுகவை சேர்ந்தவர்கள் கும்பலாக நின்றுகொண்டு சென்னை மாநகராட்சியின் ஜெ.சி.பி. இயந்திரம், டிப்பர் மற்றும் குப்பை அள்ளும் லாரிகளை வைத்துக்கொண்டு, ஜெயலலிதாவின் படத்துடன்கூடிய பேனர், அதிமுக கட்சிக்கொடியுடன் அப்பகுதியில் நிவாரண பணிகளை மேற்கொள்வது போல் பாவலா காட்டிக்கொண்டு, ஊடகங்களை வரவழைத்து காட்சிப்பதிவை செய்துகொண்டிருந்தார்கள்.
 
அதிமுகவினரின் பாணியில் சொல்லவேண்டும் என்றால் வெள்ள நிவாரண பணியில் அரசியல் ஆதாயம் தேடி, சீன் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். இப்படி ஒரு பிழைப்பு தேவைதானா? தலைமை செயலகத்திலிருந்து தமிழக அரசின் பல்வேறு துறை செயலாளர்கள் இன்று தொலைக்காட்சியில் அதிமுக அரசை காப்பாற்றும் விதமாக பல்வேறு கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு அரசு துறையின் செயலாளர்கள், ஒரே சமயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாபெரும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் கூறும்போது சென்னை மியாட் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்ற 17 பேர் பல்வேறு காரணங்களால் இறந்துபோனார்கள் என கூறியுள்ளார்.
 
மின்சாரம் துண்டிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் செலுத்தமுடியாமல் அனைவரும் இறந்துள்ளார்கள் என அவர்களின் உறவினர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டும்போது, “முழு பூசணியை, இலைச்சோற்றில் மறைக்கப்பார்த்து” ஜெயலலிதாவை காப்பாற்றுவதற்காக சுகாரத்துறை செயலாளர் இதுபோன்ற தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கிறார்.

பொறுப்புள்ள அதிகாரியான அவரே இதுபோன்று கூறலாமா? அவர் மட்டுமல்ல பிற அரசுத்துறை செயலாளர்களும், தமிழக முதலமைச்சர் ஜெயலிதாவிற்கு ஜால்ரா அடிக்கும் விதமாகவே பேட்டியளித்தனர்.
 
இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.