1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2015 (18:24 IST)

’விஜயகாந்துக்கு பொது இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று தெரியவில்லை’ - நடிகர் செந்தில் தாக்கு

விஜயகாந்துக்கு பொது இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று தெரியவில்லை என்று நடிகர் செந்தில் தாக்கி பேசியுள்ளார்.
 
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த மே மாதம் 17ஆம் அதிமுக சட்டமன்ற உருப்பினர் வெற்றிவேல் ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனையடுத்து, வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
 
அதிமுக சார்பாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேந்திரன் மட்டும் பிரதானக் கட்சியில் இருந்து போட்டியிடுகிறார். வரும் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அங்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, நகைச்சுவை நடிகர் செந்தில், ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசுகையில், ”கருணாநிதி குடும்பத்துக்காக போராடுகிறார்; ஜெயலலிதா, தமிழக மக்களுக்காக வாழ்கிறார்.
 
சில கட்சியினர், மதுக் கடைகளை மூட வேண்டும் என்கின்றனர். அவர்கள், திமுக கூட்டணியில் இருந்த போது என்ன செய்தனர்? விஜயகாந்துக்கு, பொது இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்ற இங்கிதம் தெரியாது.
 
மோடியை பார்க்க தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சிலரை அழைத்துக் கொண்டு டில்லி சென்றார். அங்கும், நாக்கை கடித்துக் கொண்டு மிரட்டுகிறார். இதை நாடே பார்த்து சிரித்தது. எனவே மக்களுக்காக வாழும் ஜெயலலிதாவுக்கு, ஓட்டு போட வேண்டும்” என்று கூறினார்.