வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 20 ஜூலை 2015 (16:26 IST)

கேரளா, தமிழகத்தின் அண்டை மாநிலமா? இல்லை அண்டை நாடா? விஜயகாந்த் ஆவேசம்

தமிழக காய்கறிகளை தடுக்கும் கேரளா, தமிழகத்தின் அண்டை மாநிலமா? இல்லை அண்டை நாடா என்கின்ற சந்தேகம் எழுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்திய பிறகு, புதிய அணை கட்ட பகீரத முயற்சிகளை மேற்கொண்ட கேரள அரசு, அதில் பலமுறை மூக்குடைபட்டதால் ஏதாவதொரு வகையில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டுள்ளது. அதன் வெளிப்பாடுதான் தமிழகத்தில் உற்பத்தியாகும் காய் கறிகளை நச்சுத்தன்மை உள்ளதென்ற பொய்யான குற்றச்சாட்டு. கேரளா தொடர்ந்து அதை சொல்லி வருவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.
 
தமிழ்நாட்டில் அதே காய்கறிகளை உட்கொள்ளும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் யாரும் இறக்கவும் இல்லை. இது குறித்து வேளாண் பல்கலைக்கழகமும், உணவு பாதுகாப்பு கழகமும் பல்வேறு ஆய்வுகள் செய்து உடலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவ்வித நச்சுத்தன்மையும் தமிழக காய்கறிகளில் இல்லை என்று திட்டவட்டமாக கூறியும், கேளர அரசு தமிழக விவசாயிகளை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
 
நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியப்படாத வகையில் தேசிய ஆய்வகங்களில் ஆய்வு செய்யப்பட்ட சான்றுடன் வருகின்ற காய்கறி வாகனங்களை மட்டுமே இனி மேல் கேரளாவிற்குள் அனுமதிக்கப்படுமென்பது இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயலாகவே இதனை காண முடிகிறது. கேரளா, தமிழகத்தின் அண்டை மாநிலமா? இல்லை அண்டை நாடா என்கின்ற சந்தேகம் எழுகிறது.
 
தமிழக விவசாயிகளை காக்க வேண்டிய தமிழக அரசோ இப்பிரச்சனையில் மெத்தனமாக இருக்கிறதென்பதே உண்மை. இது குறித்து ஆலோசிக்க கேரள மாநிலம் சுகாதார செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியது. ஆனால் தமிழக அரசு கலந்து கொள்ளாததால் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முக்கியமான இந்த காலக் கட்டத்தில், கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாமா? பெயருக்கு ஓரிரு அதிகாரிகளை கேரள மாநில சோதனைச்சாவடிக்கு  அனுப்பி விவரம் கேட்பது சரியான அணுகுமுறையா? இத்துறையின் உயர் அதிகாரிகளை நேரில் அனுப்பி தீர்வு கண்டிக்க வேண்டுமல்லவா?
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவோ அவர்களின் உணவுத்தேவைக்காக அனுப்புகின்ற காய்கறிகளையே சோதனை செய்கிறது. ஆனால் தமிழக அரசின் அதிகாரிகளும், காவல்துறையினரும் லஞ்சம் பெற்றுக் கொண்டு, கேரளாவிலிருந்து கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளை தடுக்காமல், தமிழக சோதனைச்சாவடிகளை திறந்து வைத்து வரவேற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, தமிழக- கேரளா சோதனைச்சாவடிகளை பலப்படுத்தி விவசாயிகள் காய்கறிகளை கொண்டு செல்ல தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அங்கிருந்து கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளை இரும்பும்கரம் கொண்டு தடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.