திங்கள், 16 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 8 பிப்ரவரி 2026 (12:27 IST)

விஜயகாந்தை போல முதல் தேர்தலில் வெற்றி பெறுவாரா விஜய்?.. ஒரு அலசல்!...

vijayakanth
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, டி.ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக், விஜயகாந்த், கமல் ஆகியோருக்கு பின் அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். ரஜினி கட்சி துவங்குவதாக அறிவித்துவிட்டு பின் வாங்கினார். அதேநேரம், அவரே எதிர்பார்க்காத வகையில் அரசியலுக்கு வந்தார் அவரின் நண்பர் கமல்.

கமலால் அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே வெற்றிபெறமுடியவில்லை. துவக்கத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த கமல் தற்போது அந்த கட்சியுடனே கூட்டணி வைத்துவிட்டார். எம்.பி.பதவியை வாங்கி பாராளுமன்றத்திற்கும் போய்விட்டார். விஜய் இப்ப்போது அரசியல் கட்சி துவங்கியிருக்கிறார். அரசியலை பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கு பின், விஜயகாந்துக்கு மட்டுமே மக்களிடத்தில் ஆதரவு இருந்தது. அவர் எதிர்கட்சி தலைவர் வரைக்கும் போனார். அவரின் உடல்நிலை மட்டும் சரியாக இருந்திருந்தால் முதல்வராக கூட அமர்ந்திருப்பார். ஆனால், அது நடக்கவில்லை..

தற்போது விஜய்க்கு மக்களிடம் பெரிய ஆதரவு இருக்கிறது. அவர் பேசும் பொதுக்கூட்டங்களில் பல லட்சம் பேர் கூடுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு ஓட்டு எனக்கு கிடைக்கும் என விஜய் நம்பிக்கையோடு பேசுகிறார். விஜய் தனித்து போட்டியிட்டாலே 18 சதவீத வாக்குகளை வாங்குவார் என காங்கிரஸ் வி்யூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சொல்கிறார். இதுவெல்லாம் நடக்குமா என்பது தேர்தல் ரிசல்ட் வந்த பின்னரே தெரியவரும்.

இதுவரை தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் செல்லவில்லை. எனவே, அந்த கட்சி தனித்து போட்டியிடும் நிலை உருவாகியிருக்கிறது. விஜய் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை வேளச்சேரி என 2 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. விஜயகாந்த் கட்சி துவங்கி முதலில் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இத்தனைக்கும் பாமக எப்போதும் வெற்றி பெறும் தொகுதி அது.

ஒருபக்கம் விஜய் போட்டியிடும் தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்காமல் அங்கு திமுக வேட்பாளரை களமிறக்கவும் திமுக திட்டமிட்டிருக்கிறது. விஜயகாந்தை போல விஜயும் முதல் தேர்தலிலேயே வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.