திமுக அரசு எதிர்த்த 'விபி-கிராம்-ஜி' சட்டத்திற்கு தவெக அரசு ஒப்புதல்.. எதிர்ப்பு கிளம்புமா?
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த 'விபி-கிராம்-ஜி' சட்டத்தை, வரும் ஜூலை மாதம் முதல் செயல்படுத்துவதற்குத் தமிழக அரசு இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான தங்களின் அதிகாரப்பூர்வ ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளது. இது மாநிலத்தின் மிக முக்கியமானதொரு கொள்கை மாற்றமாக கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த திட்டம் முழுமையாக மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட கூடியது அல்ல. நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள ஒன்பது மாதங்களுக்கு, இத்திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு தனது சொந்த பட்ஜெட்டில் இருந்து சுமார் 3,034.19 கோடி ரூபாயை தன் பங்காக வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் நேரடியாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 ட்ரில்லியன் டாலர் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி அசுர வேகத்தில் கொண்டு செல்வதே தனது முதன்மையான நோக்கம் என்ற தொலைநோக்குப் பார்வையையும் அவர் அங்கு அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளார்.
Edited by Siva
