1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (22:56 IST)

மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு வைகோ கடும் எதிர்ப்பு

மருத்துவப் படிப்புகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
பாஜக அரசு பொறுப்பு ஏற்றது முதல், மிக முக்கியமான கொள்கை முடிவுகளில், மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே, மத்திய அரசு மேல் நடவடிக்கை எடுக்கும், மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதிமொழி அளித்தார். 
 
ஆனால், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு பிரதமர் கூறியதற்கு எதிர்மாறாக நடைபெறுகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று, இந்திய மருத்துவக் கழகம் மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
 

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 2010 ஆம் ஆண்டு முதல் இந்திய மருத்துவக் கழகம், மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
 
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கபீர் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை விசாரித்து, அகில இந்திய மருத்துவக் கழகத்தின் உத்தரவை இரத்து செய்தும், அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தத் தேவையில்லை என்றும், கடந்த 2013 ஆம் வருடம் ஜூலை 27 ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்தது.
 
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய மன்மோகன் சிங் அரசு முடிவு செய்த போது, நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
 
தற்போது, பாஜக. அரசும், மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த முயல்வது ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, பழங்குடியின மற்றும் சிறுபான்மை மாணவர்களை பெரிதும் பாதிக்கும்.
 
2015 ஆம் ஆண்டு, தமிழக அரசு பொது நுழைவுத் தேர்வுகளை இரத்து செய்துவிட்டு, தொழில் படிப்புகளுக்கு வெளிப்படையான தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், மத்திய அரசு பொது நுழைவுத் தேர்வை திணித்தால், கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும், இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ்வரும் மாணவர்களும் மருத்துவப் படிப்புகளுக்குப் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும். மேலும்,  தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டு முறையும் பாதிக்கும்.
 
எனவே, மாநில அரசுகளின் உரிமைகளை மதித்து,  மருத்துவப் படிப்புகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தைக் கைவிட்டு, சமூக நீதிக் கொள்கையை  பாதுகாக்க மத்தியில் உள்ள பாஜக அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.