வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 6 ஜூன் 2015 (10:36 IST)

புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வைகோ கோரிக்கை

புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மத்திய அரசு கொண்டு வரவுள்ள சாலை பாதுகாப்புச் சட்டத்தினால், தமிழகத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கவும், அந்தத் தொழிலை மட்டுமே நம்பி வாழ்கின்ற அவர்களது குடும்பங்களின் வாழ்வு கேள்விக்குறி ஆகிடும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. 
 
அதுமட்டுமின்றி, இருசக்கர வாகனங்களை வைத்திருக்கின்ற ஒரு கோடிக்கு மேற்பட்டோரும் கடுமையாகப் பாதிக்கப்படுவர். 
 
புதிய சட்டத்தின்படி, நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடைகள் வைக்கவோ, உதிரிபாகங்கள் விற்கவோ முடியாது. 
 
எந்தக் கம்பெனி வாகனம் விற்பனை செய்கிறதோ, அந்தக் கம்பெனி மட்டும்தான் அந்த வாகனங்களைப் பழுதுபார்க்க முடியும், அவர்களது உதிரி பாகங்களை மட்டும்தான் பொருத்த முடியும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துவதன் மூலம், மத்தியில் ஆளும் மோடி அரசு முதலாளிகளுக்கான அரசே தவிர, தொழிலாளர்களுக்கானது அல்ல என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறது.
 
கார்ப்பரேட் கம்பெனிகளின் அரசாக மோடி அரசு செயல்படுகிறது என்று நான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதைத் மேலும் வலுச்சேர்க்கும் வகையிலேயே மோடி அரசின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
 
புதிய சட்டத்தின்படி, உதிரிபாக விற்பனையாளர்கள், லேத் ஒர்க், டிங்கர், பெயிண்டர், எலக்ட்ரிசியன், வல்கனைசிங் உள்பட இலட்சக்கணக்கான தொழிலாளர்களும்  கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
 
இவர்கள் எல்லோரும் மத்திய-மாநில அரசுகளின் உதவிகள் பெறாமல் சுயமாக தொழில் செய்து வாழ்பவர்கள். அவர்களது எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும்.
 
தமிழகத்தில் மட்டும் பத்து இலட்சம் தொழிலாளர்களும், உரிமையாளர்கள் ஒரு கோடிப் பேர்களும் பாதிக்கப்படுவார்கள் எனில், இந்தியா முழுமையும் பல கோடிப் பேர்கள் பாதிக்கப்படுவார்கள்.
 
எனவே, இத்தகைய கொடுமையான சட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்றக் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, ஜூன் 10ஆம் தேதி அன்று நடைபெற உள்ள கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.