வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2014 (08:41 IST)

சுதந்திர தமிழ் ஈழத்தை பார்க்காமல் என் உயிர் போகாது - வைகோ

சுதந்திர தமிழ் ஈழத்தை பார்க்காமல் என் உயிர் போகாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
 
ஈரோடு மாவட்ட மதிமுக அலுவலகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
 
முல்லை பெரியாறு, அமராவதி, பாலாறு பிரச்சனைகளுக்காகவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது உள்பட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை நடத்தியுள்ளேன். மதுவிலக்கு கோரி தமிழகம் முழுவதும் 1,200 கி.மீ தூரத்துக்கு நடை பயணம் மேற்கொண்டேன். அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஆதரவு கொடுத்தனர்.
 
நான் ஓட்டுக்காக நடக்கவில்லை. மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு அடுத்த நாள் மே 17-ம் தேதி சென்னையில் நடந்த முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.பிரதமராக மோடி பதவியேற்புக்கு முன்பாக வைகோவுக்கு எம்பி பதவி கிடைக்க போகிறது என அச்சு ஊடகங்களில் எழுதப்பட்டது. ஆனால் மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபட்சவை அழைத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடியுடன் 45 நிமிடங்கள் பேசினேன். ஆனால் கல் மனது கரையவில்லை. அவரிடம் மனிதாபிமானம் துளியும் இல்லை.அதற்கு பிறகு பதவியேற்பு விழா நடந்தபோது ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினேன். அப்போது எங்களை கைது செய்தனர். பதவியேற்பு விழா முடிந்த பிறகு தான் எங்களை விடுவித்தனர். பேச்சுரிமைக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி வாங்கி கொடுத்துள்ளோம். விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசலாம். படத்தையும் வைக்கலாம்.
 
விடுதலைப்புலிகள் மீதான தடையை உடைத்து காட்டுவேன். தொண்டர்கள் இன்னும் ஓராண்டிற்கு கட்சிக்காக உழைக்க வேண்டும். தொண்டர்கள் விரும்பும் இடத்துக்கு கட்சியை கொண்டுச் செல்வேன்.
 
டிச.4 ஆம் தேதி மதுவின் கொடுமைகளை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து டிச.8-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. நான் நிறைய திட்டங்களை வைத்துள்ளேன். அதை இப்போது கூற முடியாது.மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதுபற்றி அறிவிப்பேன். அதுவரை சஸ்பென்சாகவே இருக்கட்டும். சுதந்திர தமிழீழம் தான் மதிமுகவின் இலக்கு. தமிழீழ விடுதலை தான் என் வாழ்வின் லட்சியம். அதை காணாமல் என் உயிர் போகாது என்றார்.
 
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். மதிமுக மாவட்டச்செயலர் அ.கணேசமூர்த்தி, மாவட்ட பொருளாளர் முத்துமாணிக்கம், நகர செயலாளர் பொன்னுசாமி, கரூர் மாவட்ட செயலாளர் பரணிமணி உள்பட பலர் பங்கேற்றனர்.