1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2015 (12:15 IST)

காவிரி பாதுகாப்பு இயக்க ஆலோசனை கூட்டம்: வைகோ

மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்தின் காவிரி தீரத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு மறைமுகமாக நிறைவேற்ற முயற்சிக்கிறது.
 
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முனைந்ததால், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உள்ளிட்ட பொது நலம் நாடுவோரும், விவசாய சங்கங்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் தொடக்கத்திலிருந்து இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து அறப்போராட்டங்கள் நடத்தினர்.
 
2014 டிசம்பர், 2015 ஜனவரி மாதங்களில் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மீத்தேன் திட்டம் குறித்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அந்த மூன்று மாவட்டங்களிலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டார். எண்ணற்ற கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்தார்.
 
தமிழ்நாட்டின் அதிமுக அரசு மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்தது. இந்நிலையில் தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேசன் குறித்த காலத்துக்குள் மீத்தேன் திட்டத்தைத் தொடங்கவில்லை, ஆதலால் ஒப்பந்தத்தை ரத்துச்செய்யப் போவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் மீத்தேன் திட்டத்தை எப்படியும் நிறைவேற்ற மத்திய அரசு முனைந்துள்ளது.
 
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் 35 இடங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி தீர நன்செய் நிலங்கள் விவசாய சாகுபடிக்கு வழியில்லாமல் தரிசு நிலங்களாகும். அதன் பின்னர் இந்த நிலங்களை அடி மாட்டு விலைக்கு கார்பரேட் கம்பெனிகள் வாங்கிக் கொள்ளும்.
 
தமிழகத்தின் ஒரு பகுதி எத்தியோபியாவாக மாறும். இத்தகைய துயர ஆபத்து வராமல் தடுக்க மத்திய அரசினுடைய திட்டத்தை முறியடிக்க மக்களைத் திரட்டி அறப்போர் நடத்த வேண்டும்.
 
இதுகுறித்து அறப்போர் திட்டம் வகுக்க காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சையில், ஆகஸ்ட் 2–ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.