வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2016 (07:50 IST)

2 ஆயிரம் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் : அன்புமணி ராமதாஸ்

கோவில்கள், கல்வி நிறுவங்கள், மக்கள் குடியிருப்பு பகுதிகள், நெடுஞ்சாலைகள் ஆகிய இடங்களில் செயல்படும் 2 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு மூட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
“தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்குடன் முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய கடைகள், அதிக மது விற்பனையாகும் கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலுள்ள கடைகள்தான் முதலில் மூடப்பட்டிருக்க வேண்டும்.
 
2015-இல் மது விற்பனை குறைந்தபோது நடைபெற்ற பகுப்பாய்வின்போது, கணக்கெடுக்கப்பட்ட மது விற்பனை குறைவாகக் காணப்பட்ட மதுக்கடைகளே இப்போது மூடப்பட்டுள்ளன. சென்னை நகரில் 600 மதுக்கடைகளில் 7 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே அதிக அளவில் மது விற்பனையாகும் மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் தருமபுரி மாவட்டத்தில் ஒரே ஒரு மதுக்கடை மட்டுமே மூடப்பட்டுள்ளது.
 
மதுவை ஒழிப்பதில் அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், குடியிருப்புப் பகுதிகள், நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.