முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசினால்... செல்லூர் ராஜூவுக்கு தவெக எச்சரிக்கை...
முதலமைச்சரை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு தமிழக வெற்றி கழகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதலமைச்சர் என்ற பொறுப்புக்கு என்று ஒரு தனி மரியாதை இருக்கிறது; எனவே மேடைகளில் பேசும்போது அந்த மரியாதையை கொடுத்துத்தான் பேச வேண்டும் என்று தவெக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுபோன்று நாகரிகமின்றி ஒருமையில் பேசும் பட்சத்தில், செல்லூர் ராஜுவின் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை முற்றுகையிட நேரிடும் என்றும் தவெகவினர் எச்சரித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, மரியாதை குறைவாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாநகர் காவல் ஆணையரிடமும் தவெக வழக்கறிஞர்கள் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர்.
ஏற்கனவே திமுக எம்பி ஆ ராசா, முதலமைச்சரை ஒருமையில் பேசிய விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது அதிமுகவின் செல்லூர் ராஜூவும் அதேபோல் முதலமைச்சரை ஒருமையில் விமர்சித்துப் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
Edited by Siva
