நெல்லை, தூத்துக்குடியில் விஜய் நாளை பிரச்சாரம்!.. ஏற்பாடுகள் தீவிரம்!...
தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் பிரச்சாரம், பொதுக்கூட்டம் எதுவாக இருந்தாலும் போலீசார் அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அதற்கு காரணம் அவர் செல்லும் இடமெங்கும் அவரை பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடி விடுகிறார்கள். எனவே தவெக அனுமதி கேட்கும் போது குறிப்பிடும் எண்ணிக்கை விட அதிக அளவு கூட்டம் கூடி விடுகிறது.
இதனாலேயே அதிகமான கட்டுப்பாடுகளை போலீசார் விதிக்கிறார்கள். விஜயை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்கள் மற்றும் தவெக ஆதரவாளர்களின் விருப்பமாக இருக்கிறது. இதன் காரணமாக விஜயால் சரியாக பிரச்சாரம் கூட செய்ய முடியவில்லை..
சென்னையில் கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி என போலீசார் சொன்னதால் விஜய் அந்த பிரச்சாரங்களை ரத்து செய்தார் . தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே இருக்கும் நிலையில் விஜய் எப்படி தமிழகத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்வார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது..
இந்நிலையில்தான், விஜய் நாளை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். பல விதிமுறைகளுடன் விஜய்க்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. நாளை காலை விமானம் மூலம் தூத்துக்குடி வரும் விஜய் திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.. திருநெல்வேலி தவெக வேட்பாளரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து முடித்துவிட்டு தூத்துக்குடி செல்கிறார். எனவே, இதற்கான ஏற்பாடுகளை தவெகவினர் செய்து வருகிறார்கள்.