நாளை தவெக அரசின் முதல் பட்ஜெட்.. என்னென்ன முக்கிய அம்சங்கள் இருக்கலாம்?
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை நாளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.
தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக, தமிழக பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கும் திட்டம் மற்றும் அரசு பேருந்துகளில் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச பயணம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. மேலும், படித்த இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினையைப் போக்கும் வகையிலான வேலைவாய்ப்பு திட்டங்கள், மாநிலத்தின் வளர்ச்சியை மையமாகக் கொண்ட 'வெற்றி தமிழகம்' தொலைநோக்த் திட்டம் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம்.
இதுமட்டுமின்றி, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதற்கான சட்ட முன்னெடுப்புகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்த விவரங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மக்களின் நலனை காக்கும் வகையில் பாராட்டுக்குரிய பல புதிய திட்டங்கள் இடம்பெறும் இந்த பட்ஜெட், மாநில அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
Edited by Siva
