மீண்டும் வருகிறது ஜெயலலிதாவின் ஆடு, மாடுகள் வளர்ப்பு திட்டம்.. பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு..
தமிழக வெற்றிக் கழக அரசின் 2026-27 நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மிக முக்கியமான மக்கள் நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டு, கிராமப்புற மக்களின் பொருளாதாரத்திற்கு பெரும் பக்கபலமாக இருந்த விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் தவெக அரசால் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. கிராம பகுதிகளில் பால் வளத்தை பெருக்கும் நோக்கில் ரூ.59 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதேபோல், எளிய பின்னணி கொண்ட பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 30,000 பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கால்நடைப் பராமரிப்பை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகள் எதிர்பாராத இழப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ரூ.31 கோடியில் 'கால்நடைகள் காப்போம்' திட்டமும், பசுந்தீவன சாகுபடியை ஊக்குவிக்க ரூ.13 கோடியும், தீவன விதை வங்கிகள் அமைக்க ரூ.6.7 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற அடித்தட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள் தமிழக கிராமங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
Edited by Siva
