வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 19 மே 2014 (11:08 IST)

உடல் சிதறி கிடந்த சிறுமி: சிபிஐ வழக்குப்பதிவு

திருச்சியில் தண்டவாளத்தில் உடல் சிதறி கிடந்த சிறுமி சுல்தானா விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
 
திருச்சி காஜாமலை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அக்பர் பாஷா மகள் தவுபிக் சுல்தானா (13). தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த சுல்தானா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரயில் தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.
 
இது குறித்து இன்ஜினியரிங் மாணவர்கள் 5 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். ஆனால் விசாரணையில் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. 
 
சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் தங்களது சுல்தானா சாவில் மர்மம் இருப்பதாலும், காவல்துறையினரின் விசாரணையில் தலையீடுகள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தாய் மெகபூனிசா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 
 
இதையடுத்து, வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கின் சிடி கோப்புகளை கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிபிஐ அதிகாரிகள் அடுத்த மாதம் திருச்சி வந்து விசாரணை நடத்த உள்ளனர்.