1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (11:57 IST)

”திருநங்கைகளை ஆடவிட்டு வரிவசூல் செய்வது அவமானகரமானது” - கருணாநிதி

திருநங்கைகளை ஆடவிட்டு வரிவசூல் செய்வது அவமானகரமானது என்று திமுக தலைவர் கருணாநிதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்த ஃபேஸ்புக் பக்கத்தில், அவரது கேள்வி, பதில் வடிவிலான செய்தி கீழே:
 
கேள்வி :- சொத்து வரி செலுத்தாத நிறுவனங்களின் முன்பு திருநங்கைகளை ஆடவிட்டு, வரி வசூல் செய்கிற முயற்சியில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி பற்றி?
 
பதில் :- இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த வார "ஆனந்த விகடன்" "அவமானம் யாருக்கு?" என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில் இந்தச் செயல் பற்றி, "மனித மாண்புகளுக்குச் சற்றும் பொருந்தாத, மனிதத் தன்மையற்ற இந்தச் செயல் மிக மலிவானது; மிக மிக இழிவானது; கடும் கண்டனத்துக்கு உரியது.

 
இப்படி இழிவான முறையில் வரி பாக்கியை வசூல் செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. திருநங்கைகளை வாசலில் ஆடவிட்டால், அவமானப்பட்டு வரி பாக்கியைக் கட்டி விடுவார்கள் என நினைப்பது எவ்வளவு கேவலமான புத்தி. அதை அனுமதித்த மாநகராட்சி மன்னிப்பு கேட்டாக வேண்டும். தன் குடிமக்களின் சுயமரியாதையை மதிக்கத் தெரியா விட்டால், இது என்ன அரசாங்கம்?" என்றெல்லாம் எழுதியுள்ளது. திருநங்கைகளின் இந்தப் பிரச் சினையில் இதுவே என்னுடைய கருத்துமாகும்.