1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn people is upset with chief minister vijay talk in trichy

அவர்தான் முதலமைச்சர்னு யாராவது அவர்கிட்ட சொல்லுங்கப்பா!.. மாறுவாரா விஜய்?..

vijay
தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று திருச்சி சென்றார். திருச்சி கிழக்கு தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுவாக தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வது என்றால் அந்த தொகுதியில் உள்ள சில தெருக்களுக்கு சென்று வாகனத்தில் நின்றவாறு எம்.எல்.ஏக்கள் அந்த தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வார்கள். திமுக தலைவர் முக ஸ்டாலின் கூட கொளத்தூர் தொகுதிக்கு அப்படித்தான் போய் பேசினார். ஆனால் விஜய் வழக்கம் போல் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்வது போல ஒரு கல்லூரி மைதானத்தில் அரங்கம் அமைத்து அங்கேயும் மேடையில் நின்று பேசாமல் பிரச்சார வாகனத்தின் மீது நின்று பேசினார். அதாவது ‘நான் பேசுற இடத்திற்கு நீ வா’ என்கிற அதே மனநிலை.

மேடையில் நின்று பேசுவதற்கு விஜய்க்கு என்ன பிரச்சனை என்பது யாருக்கும் தெரியவில்லை. சரி அதை விட்டுவிடுவோம்.. வேனின் மீது நின்று கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் பேசினார் முதல்வர் விஜய். ஆனால் அவர் தமிழகத்தின் முதல்வராகவே பேசவில்லை என்பதுதான் பிரச்சனை. தேர்தலுக்கு முன் பிரச்சாரக் கூட்டத்தில் எப்படி பேசுவாரோ முழுக்க முழுக்க அப்படியே இருந்தது விஜயின் அந்த பேச்சு. வழக்கம்போல் எழுதி கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்.. அதே வழக்கமான உடல்மொழி மற்றும் மாடுலேஷனில் முதல்வர் விஜய் பேசியிருந்தார்.

விஜய் முதல்வராக பதவியேற்று 20 நாட்கள் ஆகிறது. அந்த 20 நாட்களில் தமிழக அரசு என்னென்ன திட்டங்களை செய்தது?.. வாக்குறுதிகளில் எதை நிறைவேற்றியது? விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகளிடம் எழுந்த அதிருப்தி..  டாஸ்மாக் ஊழியர்களிடம் எழுந்த அதிருப்தி.. இலவச மின் கட்டணம் தொடர்பாக மக்களிடம் எழுந்த குழப்பம், சிங்கப்பெண் திட்டத்தை அறிமுகப்படுத்துவதை ரத்து செய்துவிட்டு ஏன் ஒரு திருமண விழாவிற்கு போனார் விஜய்?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு தாவியதால் எதிர்கட்சிகள் வைத்த குதிரை பேர விமர்சனம்.. இதைப்பற்றித்தான் விஜய் அங்கே பேசியிருக்க வேண்டும். இதற்கெல்லாம்தானே விஜய் அங்கு பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், முதல்வர் விஜய் அதை செய்யவில்லை.

stalin vijay

மாறாக, அடுத்து நடக்கவுள்ள திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்தார் விஜய். வழக்கம்போல் முழுக்க முழுக்க திமுகவை தாக்கிப் பேசினார் விஜய். அதிலும் அதிமுக ஒன்றுமே இல்லாத கட்சி என்று கடுமையாக நக்கலடித்தார். இத்தனைக்கும் அந்த கட்சியின் ஆதரவு வேண்டும் என்பதற்காக சிவி சண்முகம் வீட்டிற்கு போய் அவரை நேரில் பார்த்தவர்தான் விஜய். அந்த கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்களை இழுக்கும் வேலைகளையும் தவெக செய்து வருகிறது..

ஏற்கனவே 4 பேர் தவெகவுக்கு வந்து விட்டார்கள். ஆனால் அதிமுக பேரை கூட சொல்லாமல் அதை தீர்ந்து போன கட்சி என பேசினார் விஜய்.. ஒருபக்கம் நான் முதலமைச்சர் ஆகக்கூடாது என்பதற்காக திமுகவும் மற்றும் பலரும்(அதிமுக) சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றார்கள் என்று விஜய் பேசினார். அதாவது கடந்த 20 நாட்களில் தவெக ஆட்சியின் மீது எதிர்க்கட்சியினர் வைத்த விமர்சனங்கள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்பட்ட குழப்பங்கள் ஆகியவற்றிற்கு பதில் சொல்லாமல் திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் நடக்கவுள்ள இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்தார் விஜய்.

இன்னமும் அதே உடல்மொழி.. அதே ஸ்கிரிப்ட்.. அதே பன்ச் வசனம்.. அதே நக்கல்.. அதே ஸ்டைல் என கடைப்பிடித்து வருகிறார். அந்த ரூட் அவருக்கு வெற்றியை கொடுத்ததால் இனிமேல் இதுதான் நமது ஸ்டைல் என முடிவு செய்துவிட்டார் போல!.. இதில் ஆச்சர்யம் என்னவெனில் வேனின் மீது ஏறும்போதும் மட்டும்தான் இதெல்லாம். வேனை விட்டு இறங்கிவிட்டால் விஜய் அதிகம் பேசாத ஒரு இண்ட்ரோவெர்ட். தலைமை செயலகத்திலும் சரி.. சட்டசபையிலும் சரி.. அதிகம் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். வேனின் மீது ஏறும்போது மட்டும் அந்நியனாக மாறுகிறார்.

vijay

ஒரு முதல்வராக தமிழ்நாட்டுக்கு அவரிடம் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது? அதை எப்படி அரசு செயல்படுத்த போகிறது? நிதி நெருக்கடி நிலைமைகளை எப்படி கையாளப்போகிறது? மத்திய அரசிடம் எப்படி இணக்கமாக செயல்பட்டு நிதிகளை பெறப் போகிறது? சட்டம் ஒழுங்கு எப்படி பாதுகாக்கப் போகிறது? என்றெல்லாம் பேசாமல் வழக்கம்போல திமுகவின் மீது சேறை வீசினார் விஜய். மக்கள் இதையா அவரிடம் கேட்டார்கள்?..

சட்ட ஒழுங்கு பற்றி பேசிய முதல்வர் விஜய் ‘எல்லாத்தையும் நீங்க கெடுத்து வச்சிருக்கீங்க.. தமிழ்நாடு ஃபுல்லா போதை கலாச்சாரம்.. இப்போது என்னை குற்றம் சொன்னா எப்படி?’ என்று கேட்டார்.. அது உண்மையாகவே இருக்கட்டும்.. ஆனால் தற்போது தமிழகத்தின் முதல்வர்  விஜய்தானே!.. போதை கலாச்சாரத்தை காவல்துறை மூலம் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்’ என்று தானே விஜய் பேசியிருக்க வேண்டும்.. இதைத்தானே மக்கள் அவரிடம் எதிர்பார்த்தார்கள்.. அதை விட்டுவிட்டு மீண்டும் திமுகவை திட்டுகிறார் விஜய்.

மொத்தத்தில் திருச்சியில் முதல்வர் விஜயின் 20 நிமிட பேச்சு ஒரு முதல்வர் பேசியது போல் இல்லாமல் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் பேசியது போலவே இருந்தது என அரசியல் விமர்சகர்களும், திமுகவினரும், பொதுமக்களும் கூட சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.. ‘அவர்தான் முதலமைச்சர்னு விஜய்கிட்ட யாராவது சொல்லுங்கப்பா’ என பலரும் நக்கலடிக்கிறார்கள்.

சினிமாவில் பேசுவது போல ஸ்க்ரிப்ட் பேப்பரை படிப்பதை விட்டு தமிழக முதலமைச்சராக விஜய் பேச வேண்டும், செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்!..

செய்வாரா முதல்வர் விஜய்?!..

About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
நீங்கள் ஒரு பைத்தியம். நான் மட்டும் இல்லையென்றால் நீங்கள் இந்நேரம் சிறையில் இருந்திருப்பீர்கள்.. யாரை சொல்கிறார் டிரம்ப்?