மாணவர்கள் உள்ளத்தில் இருந்து ஜாதிய வன்மத்தை அகற்ற வேண்டும்: தமிழ் சமூகங்களின் கூட்டமைப்பு


வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified திங்கள், 20 ஏப்ரல் 2015 (12:19 IST)
தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜாதிய கொலைகளை தடுக்க மாணவர்களின் உள்ளத்தில் இருந்து ஜாதிய வன்மத்தை அகற்ற வேண்டும் என தமிழ் சமூகங்களின் கூட்டமைப்பினர் பேட்டி அளித்துள்ளனர்.
 
 
தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜாதிய கொலைகளை கண்டு, மனம் வருந்திய பல்வேறு தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி தமிழ் சமூகங்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
 
அதன்படி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப.உதயகுமார், எழுகதிர் ஆசிரியர் அருகோ, தமிழின கூட்டமைப்பை சேர்ந்த தன்மானன், மள்ளர் மீட்புக்களத்தை சேர்ந்த கு.செந்தில் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 81 படுகொலைகள் நடந்துள்ளன. இதில் 61 கொலைகள் ஜாதிய வன்மத்தால் நடைபெற்றுள்ளன.
 
இது குறித்து, அனைத்து திராவிட கட்சிகளின் தலைமைகளும் ஒரு வெற்று அறிக்கை கூட விடாமல், தமிழ் சமூகத்தின் மீது அக்கறை காட்டாமல், கமுக்கம் காத்து வருவதை புரிந்து கொண்டு தமிழ் மக்கள் ஒற்றுமையோடு வாழ வேண்டும். அமைதி-வளம்-வளர்ச்சி என்பதெல்லாம் பொய்த்து போய்விட்டது.
 
உயிரிழப்புகளை சந்தித்த குடும்பத்தினர் தமிழக அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாகவும், காவல்துறையினர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் தடவுகிற வேலையை தமிழக அரசு கைவிட வேண்டும்.
 
பள்ளி, கல்லூரிகளில் கையில் வண்ணக் கயிறுகள் கட்டுவது போன்ற ஜாதியக் குறியீடுகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். எதிர் வரும் காலங்களில் ஜாதிய மோதல்களை தடுப்பதற்கு பள்ளி கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் உள்ளங்களில் இருந்து ஜாதிய வன்மத்தை அகற்ற வேண்டும். அதற்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதிகளில், மாணவர்கள் ஜாதி சார்ந்து தனித்தனியாக பிரிந்து இருப்பதை களைய பள்ளி நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜாதிய மோதல்களை தடுக்க, தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
 
எங்கள் தமிழ் சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில், தென் மாவட்டங்களில் பரப்புரைகள் மேற்கொண்டு ஜாதிய மோதல்களை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். வருங்காலங்களில், தமிழ் ஜாதிகள் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டால், அங்கு எந்த ஜாதியின் பக்கமும் நிற்காமல், நீதியின் பக்கம் உறுதியாக நின்று ஜாதி மோதலை தடுப்போம்.
 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :