1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 28 அக்டோபர் 2014 (08:52 IST)

மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு: பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவதும், அவர்களின் படகுகளை நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் இருப்பது குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் திங்கள்கிழமை சந்தித்து பேசினேன்.
 
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினேன். 
 
இதுகுறித்து ஏற்கெனவே எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் என்னிடம் விளக்கினார். மேலும் மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று சுஷ்மா சுவராஜ் என்னிடம் தெரிவித்தார். மேலும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர்களின் முயற்சியால் இது உடனடியாக நடக்கும் என்று நம்புகிறேன்.
 
தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய அரசு நீண்டகால திட்டத்தை வகுத்து வருகிறது.
 
குறிப்பாக ஆழ்கடலில் மீன்பிடித்தல், மீன் உற்பத்தியை பெருக்குதல், மீன் பிடிப்புக்குரிய புதிய தேவைகளை உணர்ந்து பல கோணங்களில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
 
நிரந்தர தீர்வு ஏற்படும் வரை இடைக்கால தீர்வுக்கு அரசு முயலவேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைத்தபோது, அதுகுறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். எனவே அதி விரைவில் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்''. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.