1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 13 அக்டோபர் 2014 (16:34 IST)

ஆந்திராவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

'ஹூட் ஹூட்' புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக்கடலில் அண்மையில் உருவான "ஹூட் ஹூட்" புயல், அதிதீவிரமடைந்து நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்த போது வீசிய பலத்த காற்று காரணமாக, ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் அடியோடு சாய்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மின் உபகரணங்களை அனுப்பி உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆந்திர மாநில மக்களுக்கு எந்ததெந்த விதங்களில் உதவி செய்யலாம் என்பது குறித்த ஓர் ஆய்வுக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பிறகு, கீழ்க்காணும் உதவிகளை மேற்கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
 
இதன்படி, "ஹூட் ஹூட்" புயல் காரணமாக பாதிக்கப்பட்ட ஆந்திர மக்களுக்கும், ஆந்திர அரசுக்கும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக உள்ளது என்பதைத் தெரிவிக்கும் வகையில், ஒரு நல்லெண்ணத்தின் அடையாளமாக, ஆந்திர மாநிலத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
 
ஆந்திர மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மின் கட்டமைப்புகளை சீரமைக்கும் பொருட்டு, 100 மின்மாற்றிகள், 5,000 மின் கம்பங்கள், 10,000 இன்சுலேட்டர்கள் மற்றும் இதர மின் உபகரணங்கள் அளிக்கப்படும். இவை ஆந்திர மாநிலத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
 
ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை உடனடியாக களைய உதவிடும் வகையில், முதற்கட்டமாக, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பொறியாளர், சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலைப் பணியாளர்கள் அடங்கிய மீட்புக் குழு அனுப்பி வைக்கப்படும். இந்த மீட்புக் குழு மின் ரம்பங்கள் மற்றும் அதற்குத் தேவையான ஜெனரேட்டர் மற்றும் இதர தளவாளங்களுடன் சென்று சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடும்" என்று தெரிவித்துள்ளார்.