தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் அவசர ஆலோசனை!
தமிழகக் காவல் துறையின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபி மற்றும் காவல்துறைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மிக முக்கியமான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய பொதுப்பணித் தேர்வாணைய தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, தமிழகத்திற்கு நிரந்தர மற்றும் முழுநேர டிஜிபியை நியமிப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை பரிசீலித்து, அதிலிருந்து மூன்று பேர் கொண்ட இறுதிப் பட்டியலை மாநில அரசுக்கு பரிந்துரைக்க இந்த எம்பேனல்மென்ட் கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டது.
இந்த முக்கியத்துவமிக்க ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ் மற்றும் உள்துறை செயலாளர் மணிவாசன் ஐஏஎஸ் ஆகியோர் டெல்லி சென்றிருந்தனர். கூட்டத்தில், தகுதியான அதிகாரிகளின் பணி பதிவேடுகள் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
யுபிஎஸ்சி கமிட்டி இறுதி செய்யும் 3 அதிகாரிகள் அடங்கிய பரிந்துரைப் பட்டியல் விரைவில் முறைப்படி மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதிலிருந்து ஒருவரை தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்து அறிவிப்பார் என்பதால், காவல்துறை வட்டாரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Edited by Siva
