1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadviel
Last Modified: சனி, 30 மே 2015 (00:05 IST)

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சென்று சந்தித்து ஆதரவு கேட்டார் தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி, இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சென்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 


 
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் வரும் ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் தமிழக முதலைச்சர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார்.
 
ஆனால், இந்த இடைத் தேர்தலை, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக, தாமக போன்ற முக்கியக் கடசிகள் எல்லாம் புறக்கணித்துவிட்டன.
 
இதனையடுத்து, சமூக சேவகர் டிராபிக் ராமசாமி அனைத்துக் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக களம் காண முயற்சி செய்து வருகிறார். இதற்காக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகின்றார்.
 
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சந்தித்து பேசினார். அப்போது சென்னை ஆர்.கே.நகர்  தொகுதி இடைத் தேர்தல் பாஜக போட்டியிடுவது குறித்து பேசியுள்ளனர்.
 
இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- 
 
சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க வந்தேன். அவருடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். நல்லபடியாக நடைபெற்றது. தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு, இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். 
 
ஆக, இடைத் தேர்தலுக்கு இப்போது முதலே பாஜக முண்டாசு கட்டுகிறது என்று கூறலாம்.