தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா த.மா.கா? செயற்குழு கூட்டத்தில் அதிரடி விவாதம்!
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் புதிய கூட்டணி கணக்குகளும் வியூகங்களும் அரங்கேறி வரும் சூழலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அவசர மாநில செயற்குழு கூட்டம் தற்போது சென்னையில் மிகவும் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில், மாநிலம் முழுவதிலும் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.
கடந்த சில தேர்தல்களாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்து வரும் தமிழ் மாநில காங்கிரஸ், தற்போதைய அரசியல் சூழலில் தங்களுக்கு போதிய முக்கியத்துவமும் உரிய இடங்களும் ஒதுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் தவெக போன்ற புதிய மாற்று சக்திகளின் எழுச்சி மற்றும் தேசியக் கட்சிகளின் தன்னிச்சையான போக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து இந்த கூட்டத்தில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள், தொகுதிப் பங்கீடு மற்றும் தொண்டர்களின் மனநிலை ஆகியவற்றை ஆராய்ந்து த.மா.கா மிக முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து த.மா.கா வெளியேறுகிறதா?' என்ற விவாதம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
