1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2016 (06:24 IST)

கூட்டணி - என்ன செய்யப்போகிறார் ஜி.கே.வாசன்?

கூட்டணி - என்ன செய்யப்போகிறார் ஜி.கே.வாசன்?

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது.
 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே 16 ஆம் தேதி  நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமாகா அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியானது.
 
ஆனால், தமாகா தரப்பில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு தொகுதி கேட்டனர். கிடைக்கவில்லை. கடைசியாக 24 தொகுதி கேட்டனர். அதுவும் கிடைக்கவில்லை. அதிமுக தரப்பில் முதலில் 9 சீட்களில் துவங்கி 15 சீட் தர ஒப்புக் கொண்டனர். ஆனால், தமாகா-வுக்கு இது முதல் தேர்தல் என்பதால், அனைவருக்கும் சீட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஜி.கே.வாசன் உள்ளார். இல்லை எனில் பலர் காங்கிரஸ் பக்கம் தாவக்கூடும். இதனாலே, குறைந்த தொகுதிகளை பெற வாசன் தயக்கம் காட்டுகிறார்.
 
மேலும், திமுக ஆதரவு நிலைப்பாடு எடுக்க முயன்றால், அங்கு காங்கிரஸ் இருப்பதால், வாசன் வசமாக சிக்கிக் கொண்டார். அதுவும் தமாகா கூட்டணியில் இருக்க கூடாது என்பது காங்கிரஸ் நிலைப்பாடு. இதன் காரணமாகவே, தமாகா தடுமாற்றம் கண்டு வருகிறது.
 
வாசனின் நிலை அறிந்து தமிழக பாஜக-வும், மக்கள் நலக்கூட்டணியும் கைகொடுக்க முன்வைந்துள்ளது. ஆனால், பாஜக மதவாத கட்சி என்ற பார்வை தமாகா-வுக்கு உள்ளதால், பாஜக கூட்டணியை வாசன் விரும்பவில்லை. அதே வேளையில், மக்கள்நலக் கூட்டணிக்கு செல்ல இரண்டாம் கட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மக்கள் நலக்கூட்டணியில் தமாகாவுக்கு 40 சீட் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வளவு தரமுடியாது என்றும், கடைசி நேரத்தை காரணம் காட்டி 25 சீட்தர முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
 
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே வாசன் கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆக வாசன் ஒரு முடிவு செய்துவிட்டார். அதை சொல்லவே தயக்கம் காட்டுகிறார். வாசனின் இந்த தயக்கமே அவரது கட்சியைும், அவரது இமேஜையும் ரொம்பவே பாதித்துவிட்டது. சீக்கிரம் ஒரு நல்ல முடிவை சொல்லுங்க வாசன் சார். உங்கள் தொண்டர்களைப் போலவே நாங்களும் ரொம்பவே ஆர்வமாக உள்ளோம்.