திருமா வளவனுக்கு ஆதரவாக சீமான் – மனுஸ்மிருதி தடை போராட்டத்துக்கு அதிகமாகும் ஆதரவு!

Last Updated: சனி, 24 அக்டோபர் 2020 (10:50 IST)

மனுஸ்மிருதி தடை செய்ய சொல்லி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன் தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மனுதர்மத்தில் பெண்கள் குறித்து இழிவாக சொல்லப்பட்டுள்ளதாக சில பகுதிகளை மேற்கோள் காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அந்த வீடியோவை சிலர் எடிட் செய்து தான் பெண்கள் பற்றி அவ்வாறு கூறியதாக பரப்பி வருகிறார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இப்போது திருமாவளவன் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து திருமா வளவனின் போராட்டத்துக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்ற பெரும்பாவலன் பாரதியின் முழக்கத்திற்கு ஏற்ப, மனிதர்களை மனிதர்களாய் பாராது வருணப்பேதத்தின் மூலம் பிரித்தாண்டு; ஒடுக்கித் தாழ்த்தி வீழ்த்தத் துடிக்கும், பெண்களை இழித்துரைக்கும் மனுதர்மத்தின் கொடியக் கோட்பாடுகளை எடுத்துரைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது தனிமனிதத்தாக்குதல் தொடுத்து அவமதிப்புச் செய்ய முற்படும் மத அடிப்படைவாதிகளின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று அவதூறு பரப்புரையில் ஈடுபடும் அக்கயவர்களின் கொடுஞ்செயல் துணிவற்ற கோழைத்தனமாகும்.மனுதர்மத்தின் கோர முகத்தைத் தோலுரித்து இன்று (அக்.24) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முன்னெடுக்கவிருக்கும் அறப்போராட்டத்தை ஆதரித்து, அவர்களது போராட்டம் வெல்ல வாழ்த்துகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :