திம்பம் மலைப்பாதையில் தொடரும் துன்பம்: 2 சம்பவங்களால் 10 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

Suresh| Last Modified வெள்ளி, 2 ஜனவரி 2015 (15:00 IST)
சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் லாரி ஒன்று பழுதாகி நின்றது. அதிகம் பாரம் ஏற்றிவந்த மற்றொரு லாரி கவிழ்ந்தது. இந்த இரண்டு சம்பவத்தாலும் பத்து மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


 
சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்ட இந்த பகுதிக்கு பண்ணாரியில் இருந்து இருபத்தி ஏழு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்லவேண்டும்.
 
இந்த பாதை தேசிய நெடுஞ்சாலை 209 என்பதாலும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லைப்பகுதி என்பதாலும் இந்த வழியாக எப்போதும் போக்குவரத்து அதிகமாகக் காணப்படும்.
 
இந்த கொண்டை ஊசி வளைவுகளில் அவ்வப்போது வாகனங்கள் திரும்ப முடியாமலும், பழுதாகியும் மற்றும் விபத்து ஏற்பட்டும் போக்குவரத்து தடை ஏற்படுவது வழக்கமாகி வருகிறது.
 
கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெய்த தொடர்மழையால் கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறியது. இதனால் நேற்று முன்தினம் இரவு பேப்பர் ரோல் ஏற்றி சென்ற லாரி ஒன்று பனிரெண்டாவது கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்றது.
 
இதையடுத்து நேற்று அதிகாலை நான்கு மணியளவில் ஏழாவது கொண்டை ஊசி வளைவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பருத்தி பாரம் ஏற்றிவந்த லாரி அதிக பாரத்தால் தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
 
இந்த இரு சம்பவங்களால் பத்து மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் புத்தாண்டு தினமான நேற்று, பிற்பகல் 2 மணியளவில் தான் போக்குவரத்து சீரானது.


இதில் மேலும் படிக்கவும் :