வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 20 மே 2015 (18:23 IST)

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை - பழ.நெடுமாறன் வேதனை

இலங்கையில் ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வேதனை தெரிவித்துள்ளார்.
 
ராமேசுவரம்0 என்.எஸ்.கே. வீதியில், முள்ளி வாய்க்கால் சம்பவத்தை நினைவுகூறும் வகையில், தமிழர் தேசிய முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது செய்தியாளர்களிடம் கூறிய அவர், ”தமிழக மீனவர்களை கடத்தல்காரர்கள் என்று உயர் நீதிமன்றத்தில், கடலோர காவல்படை அதிகாரி கூறியது மிகவும் கண்டிக்கதக்க செயலாகும். இதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
 
தமிழக கடற்கரை பகுதிகளின் பாதுகாப்புக்காக தான் கடலோர காவல் நிலையம், கடலோர காவல்படை, கடற்படை என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை தாண்டி கடத்தல் நடந்தால், இந்த துறை அதிகாரிகள் மீது மக்களுக்கு நம்பகத் தன்மைதான் ஏற்படும்.
 
ஆந்திர காவல் துறையால் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதியால் குழு அமைத்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். செம்மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ள இரு மாநில அரசியல்வாதிகள் மீதும், அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழர்களுக்கு நிரந்த தீர்வு கிடைக்கும் என பலரும் கூறி வந்தனர். ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்பும், முகாம்களில் இன்னும் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற்றம் மிக அதிக அளவில் நடைபெற்று வருகின்றது.
 
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்று வந்த பின்பும் இலங்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எந்த மாற்றமும் நடைபெறவில்லை. அங்கு, தொடர்ந்து தமிழர்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.