திமுக - தவெக கூட்டணி: திருமாவளவனின் அதிரடி பேட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியலை எதிர்ப்பதற்காக, திராவிட முன்னேற்ற கழகமும் தமிழக வெற்றிக் கழகமும் ஒரே அணியில் இணைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்து தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே பாஜகவை எதிர்ப்பவர்கள் என்பதால், அவர்கள் இருவரும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் தான் ஏதோ குழப்பத்தை ஏற்படுத்துவதாக விமர்சிப்பவர்கள் குறித்துப் பேசிய திருமாவளவன், "என்னுடைய பார்வை ஒரு மாநிலத்தை மட்டும் சார்ந்தது அல்ல; அது தேசிய அளவிலானது. நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால், மதவாத சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும். இதைச் சாதாரண அரசியல்வாதிகளாலோ அல்லது ஊடகவியலாளர்களாலோ புரிந்து கொள்ள முடியாது" என்று சாடினார்.
Edited by Siva
