வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2016 (15:52 IST)

ராம்குமார் வழக்கில் இவ்வளவு தீவிரமாய் அரசு ஏன் எதிர்க்கிறது? : திருமா கேள்வி

ராம்குமார் வழக்கில் இவ்வளவு தீவிரமாய் அரசு ஏன் எதிர்க்கிறது? : திருமா கேள்வி

ராம்குமாரின் உடல் பரிசோதனை தொடர்பான வழக்கில், எங்களின் சாதாரண கோரிக்கையை கூட அரசு தரப்பு எதிர்ப்பது வேதனை தருகிறது என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சுவாதி கொலையில் கைது செய்யப்பட்டு, சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல், கடந்த நான்கு நாட்களாக  பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருக்கிறது.
 
அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை பிரேத பரிசோதனையின் போது அனுமதிக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அதற்கு அரசு தரப்பு கடுமையான எதிர்ப்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ராம்குமாரின் தந்தைக்கு தொல்.திருமாவளவன் ஆதரவாக நின்று செயல்பட்டு வருகிறார். 
 
இரு நாட்களுக்கு முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனியார் மருத்துவரை அனுமதிப்பது குறித்து இரு நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்ததால், இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.   
 
அதன்படி, அந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்புவிற்கும், அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் எழுந்ததாக தெரிகிறது. அதன்பின் இன்று மதியம் 5 மணிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த திருமாவளவன் “ ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது, அரசு மருத்துவர்களோடு, எங்கள் தரப்பு மருத்துவர் ஒருவர் மற்றும் எங்களின் வழக்கறிஞர் அருகில் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்பது மிகச் சாதாரணமான கோரிக்கை. ஆனால், இதைக்கூட அரசு தரப்பு நிராகரிப்பது வேதனையாக உள்ளது. 
 
பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக நிற்க வேண்டிய அரசு, அவர்களுக்கு எதிராக நிற்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் எனில், ராம்குமார் மரணத்தில் ஏதோ மர்மம் அடங்கியிருப்பதை அவர்களே உறுதி செய்வது போல் உள்ளது” என்று அவர் கருத்து தெரிவித்தார்.