1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2015 (19:28 IST)

ரேசன் கடைகளில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும் : ஜிகே வாசன்

தீபாவளி வர இருப்பதால் பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் தட்டுப்பாடு இன்றி பொருட்கள் வழங்க வேண்டும் என்று  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  “தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் கீழ் சுமார் 34 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. மாதந்தோறும் பொது விநியோகத் திட்டத்தின்படி, வழங்கப்படும் சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மண்ணெண்ணெய் போன்ற பல்வேறு வகையான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அனைத்தும் முழுமையாக, முறையாக வழங்கப்படுவதில்லை.
 
இந்தநிலையில் ரேசன் கடைகளில் போதுமான ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். இவர்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு கருத்தில் கொண்டு நிறைவேற்றிட வேண்டும். அவர்களுடைய போராட்டம் தவிர்க்கப்பட்டால் தான் ரேசன் கடைகளை நம்பி இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு அன்றாட, அத்தியாவசிய உணவு பொருட்கள் தங்கு, தடையின்றி கிடைக்கும்.
 
தீபாவளி பண்டிகை வர இருப்பதால், ரேசன் கடைகளின் மூலம் வழங்கப்படும் பருப்பு வகைகள், எண்ணெய் உள்பட அனைத்து உணவு பொருட்களையும் தட்டுப்பாடின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்” என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளார்.