”உழவு செய்ய நிலம் இருக்காது; குடியிருக்க வீடு இருக்காது” - ராமதாஸ் காட்டம்

லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 1 ஜூன் 2015 (17:55 IST)
நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டு வந்தால் உழவு செய்ய நிலம் இருக்காது; குடியிருக்க வீடு இருக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நிலம் கையகப்படுத்துதல் சட்டம் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை எந்த எதிர்ப்பும் இல்லாமல் கையகப்படுத்தி பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்க்க முடியும். அதனால்தான் மிகவும் ஆபத்தான இந்த சட்டத்தை அனைவரும் எதிர்க்கிறார்கள். இது தொடர்பான மக்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காக மத்திய அரசு மீண்டும், மீண்டும் அவசர சட்டங்களைக் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் மூன்றாவது முறையாக பிறப்பிக்கப் படவிருப்பது குறித்து ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘‘வேகமாக மாறி வரும் உலகில் விவசாயிகளுக்கு பாசனக் கால்வாய்கள் தேவை; விளைபொருட்களை கொண்டு செல்லசாலைகள் தேவை; பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள் மற்றும் நவீன வசதிகள் தேவை. இதற்காகத்தான் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்.
விவசாயிகளிடம் நிலங்களைக் கையகப்படுத்தி தொழிற்சாலைகள் அமைக்கப்படும் போது இந்த வசதிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இவை வரும் போது விவசாயி உழவு செய்ய நிலம் இருக்காது; குடியிருக்க வீடு இருக்காது என்பதால் உழவனும் அங்கு இருக்க மாட்டான்.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்ற கூட்டு நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுக்காகக் கூட காத்திருக்காமல் அவசரச்சட்டத்தை பிறப்பிப்பது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல். இதைக் குடியரசுத் தலைவர் அனுமதிக்கக்கூடாது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :