வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 26 ஆகஸ்ட் 2015 (06:00 IST)

ஈழத் தமிழர்களுக்கு விக்கிரமசிங்க துரோகம் செய்யக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கைப் போர்க்குற்ற விசாரணை குறித்து , இலங்கைப் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்கள், புதிய அரசிலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதையே காட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இலங்கை தேர்தலில் வெற்றி பெற்று தேசிய அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க ஒரு நாளிழுக்கு அளித்த நேர்காணலில் ஈழத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு, இலங்கைப் போர்க்குற்ற விசாரணை குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. புதிய அரசிலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதையே இவை காட்டுகின்றன.
 
இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இந்தியாவும், இலங்கையும் 1987ஆம் ஆண்டில் செய்து கொண்ட அமைதி உடன்பாட்டின் அடிப்படையில் தான் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் 13ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திருத்தத்தை செயல்படுத்துவதால் தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்காது என்று கூறி அப்போதே இந்த தீர்வை ஈழத்தமிழர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
 
ஆனாலும், அதன்பின் 28 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அதில் கூறப்பட்ட உரிமைகளை வழங்குவதற்குக் கூட இலங்கை அரசு முன்வரவில்லை. இந்த நேரத்தில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில், ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து எந்த உத்தரவாதத்தையும் அளிக்காமல், மழுப்பலான பதில்களையே அளித்திருக்கிறார்.
 
ஒன்று பட்ட இலங்கையில், தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு விடையளித்த அவர், 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்திற்குட்பட்டு இதை செய்ய முடியுமா? என்பது குறித்து ஆராயலாம் என கூறியிருக்கிறார். 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி தமிழர்கள் வாழும் பகுதிகளின் முதலமைச்சர்களுக்கு தமிழகத்தில் ஊராட்சித் தலைவருக்கு உள்ள அதிகாரத்தைக் கூட வழங்க முடியாது எனும் நிலையில், சுயாட்சி உரிமை வழங்குவது குறித்து ஆராயலாம் என்பது ஏமாற்று வேலை என்பதைத் தவிர வேறில்லை.
 
13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தில் தமிழர்களுக்கு ஓரளவாது அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்ட அம்சங்களில் மிகவும் முக்கியமானவை வடக்கு, கிழக்கு மாநிலங்களை இணைப்பது, காவல்துறை மற்றும் நில நிர்வாக அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்குவதாகும்.
 
ஆனால், மாநிலங்கள் இனைப்பு குறித்து எந்த வாக்குறுதியையும் ரணில் வழங்கவில்லை. நில அதிகாரம் தேவையில்லை; காவல்துறை அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படும் என்று கூறி அவற்றை வழங்க முடியாது என்பதை மறைமுகமாகத் தெரிவித்து விட்டார். இத்தனைக்கும் இவை புதிய கோரிக்கைகள் அல்ல. 2002 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் போர்நிறுத்தத்தை அறிவித்த பிறகு அவர்களுக்கும், ரணில் அரசுக்கும் இடையே நடந்த் பேச்சுகளின் போது இந்த அதிகாரங்களை வழங்க அரசுத்தரப்பு முன் வந்தது.
 
ஆனால், இப்போது இந்த அதிகாரங்களை வழங்க மறுப்பதன் மூலம் தமிழர்களை மூன்றாம் தர குடிமக்களாக நடத்தவே ரணில் துடிக்கிறார் என்பது தெளிவாகிறது. 10 ஆண்டுகளாக அரசியலில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த விக்கிரமசிங்கவுக்கு, அதிபர் தேர்தலில் இராஜபக்சேவை வீழ்த்தி மறுவாழ்வு அளித்தது தமிழர்கள் தான். அவர்களுக்கு விக்கிரமசிங்க துரோகம் செய்யக்கூடாது.
 
அதே போல், இலங்கை இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்த பன்னாட்டு விசாரணையை ஏற்க முடியாது; உள்நாட்டு விசாரணைக்கு மட்டுமே தமது அரசு ஒப்புக்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். இது ஈழத்தமிழர் இனப்படுகொலையை மூடி மறைக்கும் முயற்சியாகும். இலங்கை இனப்படுகொலையை முன்னின்று நடத்தியது இராஜபக்சேவும், அவரது குடும்பத்தினரும் தான். அவர்கள் அரசியல் ரீதியாக எதிரிகள் என்ற போதிலும், சிங்களர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இராஜபக்சே தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கும் விக்கிரமசிங்க தமிழர்களின் நலனைக் காப்பாற்றுவார் என்று நினைப்பது பகல் கனவாகவே அமையும். இன்னும் கேட்டால் விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தை நாடகத்தை நடத்திக் கொண்டே, ஈழத்தமிழர்களை ஒழிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து முடித்தவர் தான் ரணில் விக்கிரமசிங்க.
 
இராஜபக்சேவாக இருந்தாலும், விக்கிரமசிங்கவாக இருந்தாலும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் ஒரே நிலைப்பாடு தான். இராஜபக்சே, விக்கிரமசிங்க என்று முகமூடிகள் தான் மாறுமே தவிர சிங்களப் பேரினவாதம் தான் அவர்களை ஆட்டிப்படைக்கும். ஈழத்தமிழர்களை கொடுமைப்படுத்தினால் தான் சிங்களர்களின் வாக்குகளைப் பெற முடியும் என்பதாலேயே தமிழர்களுக்கு அவர்கள் நன்மை செய்ய மாட்டார்கள்.
 
ரணில் தலைமையிலான அரசில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்தால் தமிழர்களுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்பதால், அதை தவிர்க்க, எதிரெதிர் நிலைப்பாடு கொண்ட இராஜபக்சே கட்சியும், ரணில் கட்சியும் இணைந்து தேசிய அரசு அமைத்திருப்பதிலிருந்தே அவர்களின் தமிழர் எதிர்ப்பு அரசியலை புரிந்து கொள்ள முடியும்.
 
எனவே, இப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டு இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகளை பன்னாட்டு குற்றவியல் விசாரணைக்கு அனுப்பவும், ஈழத் தமிழர்களுக்கு அவர்கள் விரும்பும் தீர்வைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.