தோல்வி பயமா? தென்னவன் விஜயகாந்த் வீடியோவை வைரலாக்கி விஜயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், விஜயகாந்த் நடித்த 'தென்னவன்' பட வசனத்தை இணையவாசிகள் வைரலாக்கி சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
நேற்றைய தினம் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு முக்கிய தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், அரசியல் களத்தில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
மாற்று அரசியல், புதிய பாதை என தன்னை ஒரு புதிய அரசியல் சக்தியாக முன்னிறுத்தி களத்தில் குதித்துள்ள விஜய், ஏன் இரண்டு தொகுதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒருவேளை ஒரு தொகுதியில் எதிர்பாராத விதமாகத் தோற்றுவிட்டால், மற்றொரு தொகுதி கை கொடுக்கும் என்ற தோல்வி பயம் தான் இதற்கு முக்கிய காரணமா? என்று சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர்களும், நெட்டிசன்களும் தங்களது கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த விவாதங்கள் ஒருபுறம் சூடுபிடிக்க, மறுபுறம் மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நடித்த தென்னவன் படத்தின் குறிப்பிட்ட காட்சி ஒன்றை இணையவாசிகள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வீடியோ காட்சியில், ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடக் கூடாது என விஜயகாந்த் ஆவேசமாகக் கூறுவார். அப்போது குறுக்கிடும் பத்திரிகையாளர் ஒருவர், இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? எனக் கேள்வி எழுப்புவார்.
அதற்குப் பதில் சொல்லும் கொடுக்கும் விஜயகாந்த், ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் நிற்பதுதான் ஜனநாயகத்திற்கு எதிரானது. இரண்டு தொகுதியிலும் ஒரு வேட்பாளர் போட்டியிட்டு, இரண்டிலும் வென்ற பின்னர், ஒரு தொகுதியை ராஜினாமா செய்வார். அதன் பின்னர் அந்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தச் சொல்வது.. இதற்கெல்லாம் யார் பணம் செலவாகிறது? கை வண்டி இழுப்பவனும், மூட்டை தூக்குபவனும் கஷ்டப்பட்டு கட்டும் வரிப்பணம்தானே? வேலை செய்து கஷ்டப்பட்டு வரி கட்டும் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பதா? அரசியல்வாதிகளின் ஈகோவுக்காக மக்களை முட்டாளாக்குவதை இன்னும் எத்தனை வருஷம்தான் அனுமதிக்க முடியும்?" எனச் சாடுவார்.
விஜயகாந்தின் இந்த அனல் பறக்கும் வாதம் அடங்கிய வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக ட்ரெண்டாக்கி வரும் நெட்டிசன்கள், "அன்று கேப்டன் திரையில் சொன்னது, இன்று விஜய்க்கு பொருந்துகிறது" எனப் பதிவிட்டு வருகின்றனர்.