நேரடி ஒளிபரப்பு செய்ய கூடாது.. கரூரில் இருந்து வெளியேற்றப்பட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள்...
கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சியில் இருந்து, செய்தி நிறுவனங்களைச் சார்ந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக செய்தியாளர்களுக்கு முறையாக அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும், காவல்துறை அவர்களை நிகழ்ச்சியில் பங்கேற்கவிடாமல் தடுத்தது அதிர்ச்சியைத் தந்துள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நேரடியாக வந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , செய்தியாளர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சரின் விழாவை எந்தவொரு செய்தி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பக்கூடாது என்றும், முதலமைச்சரின் உரையை தங்கள் சேனல்களில் ஒளிபரப்பக் கூடாது என்றும் காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
முறையான அனுமதி பெற்றிருந்த போதிலும், காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, ஊடக சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் திடீர் நடவடிக்கையினால் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மைக்கு ஊடகங்கள் ஊன்றுகோலாக இருக்கும் சூழலில், செய்தியாளர்களைத் தடுத்து வெளியேற்றிய சம்பவம் அரசியல் களத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
Edited by Siva
