வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (05:30 IST)

கலாம் மறைவுக்கு துக்கம் அனுசரிக்காத நகராட்சியை கண்டித்து பெண் கவுன்சிலர் ராஜினாமா

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு துக்கம் அனுசரிக்காத, தென்காசி நகர்மன்ற நிர்வாகத்தை கண்டித்து,  பெண் கவுன்சிலர் மாரிசெல்வி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 

 
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்திய திருநாடே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
 
இந்நிலையில், தென்காசி நகர் மன்றத்தின் சாதாரண கூட்டம் நகர் மன்றத் தலைவர் பானு தலைமையில் நடை பெற்றது. நகர் மன்ற கூட்டம் தொடங்கிய போது, 29ஆவது வார்டு சுயேட்சை  கவுன்சிலர் மாரிசெல்வி எழுந்து பேசினார்.
 
அப்போது அவர் பேசுகையில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு இன்று நாடே துக்கம் அனுசரித்து வருகிறது. எனவே, இந்த கூட்டத்தை நீங்களே ஒத்திவைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. நான் கோரிக்கை வைத்தும் அதை செய்ய முன்வரவில்லை. எனவே, நகராட்சி கூட்டம் நடத்தியதைக் கண்டித்து எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறி,  தனது ராஜினாமா கடிதத்தை தலைவர் பானுவிடம் வழங்கினார். அதை தலைவர் பானுவும் ஏற்றுக் கொண்டார்.
 
இந்த நாட்டில் சாதரண பதவியைக்கூட வைத்து பலரும், பணம் பார்த்து வரும் நிலையில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்காக பெண் கவுன்சிலர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.