இன்று முதல் டாஸ்மாக் மதுபானத்தை ஆன்லைனில் புக் செய்யலாம்.. இனிமேல் லைனில் காத்திருக்க வேண்டாம்...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து மதுபானங்களை நேரடியாக பெற்றுக்கொள்ளும் புதிய திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Tasmac.Tn.Gov.In இணையதளம் மூலம் நுகர்வோர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம். மாநிலம் முழுவதிலும் உள்ள 4000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இணையதளத்தில் மதுபானங்களின் எம்.ஆர்.பி. விலை பட்டியல் வெளிப்படையாக தெரிவிக்கப்படும் என்றும், அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. பண பரிவர்த்தனை முடிந்ததும் பெறப்படும் க்யூ.ஆர் குறியீட்டை காண்பித்து, கடைகளில் காத்திருக்காமல் மதுவை பெற்று கொள்ளலாம்.
ஆனால், இந்த சேவையைப் பயன்படுத்த பயனாளர்களுக்குக் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் 'டோர் டெலிவரி' திட்டம் எதுவுமில்லை என்பதால், முன்பதிவு செய்த நபரே நேரில் சென்றுதான் மதுவை வாங்க வேண்டும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை எந்த கடையில் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் இந்த வசதி மதுப்பிரியர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
Edited by Siva
