1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2016 (14:38 IST)

தமிழன் தாலியை அடகு வைப்பான்; தன்மானத்தை விடமாட்டான் - சீமான்

தமிழன் தன்மானம் மிக்கவன். வறுமைக்காக ஆடு, மாடுகளை விற்பான். தாலியை அடகு வைப்பான். ஆனால் தன்மானத்தை, இனமானத்தை விடமாட்டான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
 

 
நாம் தமிழர் கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. கடலூர் சட்டமன்ற தொகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.
 
இதையடுத்து சீமான் கடலூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று மாலை கடலூர் சில்வர் கடற்கரைக்கு சென்ற சீமான், அங்கிருந்த பொதுமக்களிடம், தனக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
 
பின்னர், வண்ணாரப்பாளையத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான், ”மாற்றம் என்பது ஆட்சி மாற்றம் அல்ல. கொள்கை மாற்றம். பணம் இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்றால் பணநாயகம் தான் இருக்கும். ஜனநாயகம் இருக்காது.
 
பணக்காரர்களுக்கும், முதலாளிகளுக்கும் அரசியல் செய்தால் மக்களுக்கான அதிகாரம் இருக்காது. மண்ணையும், மக்களையும் நேசிக்கிறவர்கள் அரசியல் செய்ய முடியும் என்பதை உருவாக்க வேண்டும்.
 
இந்த தேர்தலில் பணத்தை வாங்கிக்கொண்டு மக்கள் ஓட்டுபோட மாட்டார்கள். அது நடக்காது. தமிழன் தன்மானம் மிக்கவன். வறுமைக்காக ஆடு, மாடுகளை விற்பான். தாலியை அடகு வைப்பான். ஆனால் தன்மானத்தை, இனமானத்தை விடமாட்டான்.
 
இந்த தேர்தலில் பணம் ஒரு பொருட்டாக இருக்க போவதில்லை. மாற்றத்திற்கான தேர்தலாக இதை பார்க்க வேண்டும். அதற்காக தான் மாற்றம் என்பது சொல் அல்ல, செயல் என்று நாங்கள் கூறி வருகிறோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் புதிய அரசியல் வரலாறு படைப்போம்” என்று கூறியுள்ளார்.