வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (14:37 IST)

நான் தமிழ் வசையா? - இளங்கோவனை தாக்கும் தமிழிசை சவுந்தரராஜன்

என்னைப் பற்றி பேசும்போது தமிழிசையா? தமிழ் வசையா? என அநாகரிகமான முறையில் விமர்சித்துள்ளார். நாகரிக அரசியலை அவர் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 

 
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இளங்கோவனை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இதில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அந்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் பேச்சு அமெரிக்க எம்.பி.க்களை வசீகரித்துள்ளது. 66 முறை கைதட்டி எம்.பி.க்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
ஆனால், இளங்கோவன் மோடியை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். அரசின் செயல்பாடுகளையும், கொள்கை ரீதியாகவும் விமர்சனம் செய்வதை பாஜக வரவேற்கிறது. நாட்டின் பிரதமரை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி பேசுவது நாட்டையே அவமானப்படுத்தும் செயல் என்பதை இளங்கோவன் உணர வேண்டும்.
 
முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி ஆகியோரையும் இளங்கோவன் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். என்னைப் பற்றி பேசும்போது தமிழிசையா? தமிழ் வசையா? என அநாகரிகமான முறையில் விமர்சித்துள்ளார். நாகரிக அரசியலை அவர் கற்றுக் கொள்ள வேண்டும்.
 
பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்க வில்லை என இளங்கோவன் பேசியிருக்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. இளங்கோவனுக்கு துணிவிருந்தால் தனித்து போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.