வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2016 (22:43 IST)

கர்நாடகாவில் இருந்து தமிழகம் திரும்பிய 1 லட்சம் பேர்

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, பெங்களூருவில் வசித்துவந்த தமிழர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தமிழகம் திரும்பியுள்ளனர்.
 

 
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. 1991ஆம் ஆண்டிற்கு பிறகு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதுபோல வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால், அவர்கள் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பத் தொடங்கி உள்ளனர்.
 
கர்நாடகத்தில் வாழும் 3 ஜோடிகளுக்கு புதன்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், அங்கு வன்முறை வெடித்ததால், அவர்கள் தங்களின் திருமணத்தை சொந்த ஊரான திருவண்ணாமலை, விழுப்புரம், செஞ்சியிலேயே நடத்திக் கொள்ள முடிவு செய்து, திருமண வீட்டார் தங்களின் உடமைகளுடன் ஒசூருக்கு வந்தனர்.
 
கர்நாடகத்தில் இருந்து அத்திப்பள்ளி வரை வரும் தமிழக மக்களை, அங்கிருந்து ஒசூர் வரை இலவசமாக அழைத்து வருவதற்காக தமிழக அரசுப் பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.
 
ஒசூர் அருகே தமிழக கர்நாடக மாநில எல்லையில் பாதுகாப்புக்காக 300-க்கும் மேற்பட்ட இரு மாநில போலீஸார், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.