செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2015 (19:20 IST)

திரும்பத் திரும்ப சொல்கிறார் ஜெயலலிதா: விஜயகாந்த் பாய்ச்சல்

தமிழகத்தில் மழை, வெள்ள சேதங்கள் தவிர்க்க இயலாதது என்று முதல்வர் திரும்பத் திரும்ப சொல்கிறார். இது கண்டிக்கத் தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.


 

 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் மழை, வெள்ள சேதங்கள் தவிர்க்க இயலாதது என்று முதல்வர் திரும்பத் திரும்ப சொல்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் தான் பாதிப்புகள் குறைந்துள்ளது என்று முதல்வர் கூறியுள்ளார். ஆனால், அதற்கு பிறகும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர் பந்தல் என்னுமிடத்தில் கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கி, சாலைகளும், வீடுகளும் மூழ்கியுள்ளன.
 
பலமுறை அப்பகுதி மக்கள் புகார் கூறியும், மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற கோரியும் வெளியேற்றவில்லை. தேமுதிக சார்பில் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தும் அதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. அந்த பகுதியை பார்க்க நான் வருகிறேன் என்பதை தெரிந்து கொண்டதும், இப்போது நீரை வெளியேற்றியுள்ளனர்.
 
2004-ல் சுனாமி பேரழிவும், 2005-ல் புயல், மழை, வெள்ளமும், 2011-ல் தானே புயலும், 2015ல் வெள்ளமும் ஏற்பட்டு பேரழிவுகள் நடந்துள்ளன. இத்தனை பேரழிவுகளை சந்தித்தும் அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. ஒரிஸா மாநிலத்தை 1999-ம் ஆண்டு புயல் தாக்கியது. இந்த அனுபவம் அம்மாநிலத்தை பாய்லின் புயலிலிருந்து காப்பாற்றியது. அப்போது, சுமார் 11.5 லட்சம் குடும்பங்கள் மற்றும் கால்நடைகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டன.
 
 
கடந்த அக்டோபர் 16ஆம் தேதி சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே வானிலை ஆராய்ச்சி மையம் தமிழகத்தில் இதுபோன்ற பேரழிவு ஏற்படுமென்று எச்சரிக்கை விடுத்தும், அதை சிறிதும் சட்டை செய்யாமலும், இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும், குளுகுளு கொடநாட்டிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா சென்றததுதான் இந்த பேரழிவிற்கு முக்கிய காரணமாகும். மேலும் 2012 ஆம் ஆண்டே, தலைமை கணக்கு அதிகாரி (சிஏஜி) தனது அறிக்கையில் மீண்டும் ஒருமுறை இதுபோன்ற பேரிடர் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளக்கூடிய தயார் நிலையில் தமிழ்நாடு இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைக்கு பிறகாவது கடந்த மூன்று ஆண்டுகளில் தேவையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பேரழிவு தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இதுபோன்ற தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவருக்கு ஆமாம் சாமி போடுபவர்களை மட்டுமே பிடிக்கும். தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி காலங்களில் சுய அரசியல் இலாபத்திற்கும், தேர்தல்கால வாக்கு வங்கியை மனதில்கொண்டும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதும், கட்டிடங்கள் கட்டப்படுவதும், நீர்வழிச்சாலைகள் அடைக்கப்படுவதும், வசிப்பதற்கு தகுதியில்லாத, தாழ்வான மற்றும் நீர்நிலை பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு வசிப்பிடங்களை அமைத்துக்கொடுப்பதுமென, இயற்கைக்கு எதிரான செயல்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்தேறி வந்ததற்கு இரண்டு ஆட்சிகளும் துணை போயுள்ளன. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குதான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
 
2009ஆம் ஆண்டு ஆசிய நகரங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து கனடாவை சேர்ந்த திட்ட அலுவலர் ராஃப் ஸ்டோரி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பல்வேறு ஆய்வுகள் செய்து, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு அளித்த அறிக்கையை 2ஆட்சிகளும் துச்சமாக நினைத்து கிடப்பில் போட்டதும் இந்த பேரழிவுக்கு காரணம்.
 
வாக்குகளுக்காக நிவாரணம் வழங்குவதை விட்டுவிட்டு, உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் நிவாரண உதவிகளையும், இழப்பீடுகளையும் வழங்க வேண்டும்'' என்று  அவர் குறிப்பிட்டுள்ளார்.