1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (09:15 IST)

முதலாளி திட்டியதால் வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பிவிட்டு துபாயில் தற்கொலை செய்த தமிழக வாலிபர்

முதலாளி திட்டியதால் வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பிவிட்டு துபாயில் தற்கொலை செய்த தமிழக வாலிபர்

துபாயில் பணிபுரியும் பெரம்பலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஓகளூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மகன் ராஜ்குமார் (30). இவர் துபாயில் மின்பொருட்கள் விற்பனை கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வந்தார்.
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கடையில் இருந்து மற்றொரு கடைக்கு தொலைக்காட்சி பெட்டி ஒன்றை டெலிவரி செய்ய முயன்ற போது டி.வி. உடைந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கடை உரிமையாளர்கள் ராஜ்குமாரை திட்டியுள்ளனர்.
 
இதனால் மனம் உடைந்த ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக ராஜ்குமார் தனது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பி உள்ளார்.
 
அதில், “எனக்கு நீதி கிடைக்க வேண்டும், கம்பெனியில் முதலாளிகள் தகாத வார்த்தைகளால் மிகவும் மோசமாக என்னை திட்டி செத்து போ, என்று கூறியதால் இந்த முடிவுக்கு வந்தேன்.
 
இந்த மெசேஜ் பார்த்து அரை மணி நேரத்தில் என் உயிர் என்னிடம் இருக்காது. நீங்கள் தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். அப்பா, அக்காவை எந்தவித கஷ்டமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், தற்போது இறந்து போன என் அம்மாவிடம் நான் செல்கிறேன்.
 
என் உயிருக்கு நீதி கிடைக்க வேண்டும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும், பா.ம.க உதவ வேண்டும், எனது உடலை ஓகளூரில் அடக்கம் செய்ய வேண்டும். எனக்கு இது இறுதி சடங்கு அல்ல, நான் நல்ல முடிவை தான் எடுத்து இருக்கிறேன்.
 
எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. எனது அம்மா பக்கத்திலே அடக்கம் செய்ய வேண்டும். அதனை உறவினர்கள், நண்பர்கள் பார்த்துக்கொள்ளுங்கள். என்னை என்னென்ன வார்த்தைகளால் திட்ட வேண்டுமோ, அப்படியெல்லாம் திட்டிவிட்டார்கள்.
 
இதை கேட்டு விட்டு உயிர் வாழ விரும்பவில்லை. என்னால் அவர்களை அழிக்க முடியும். அவர்கள் குடும்பம் வாழ வேண்டும், அதற்காக என்னை நான் அழித்துக் கொள்கிறேன். இதற்கு நீதி கிடைக்க வேண்டும். அடக்கம் நடக்க ஏற்பாடு செய்யுங்கள், முருகா.. முருகா... முருகா...” என பேசியுள்ளார்.