"ஊழல் மிகுந்த திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது.. பிரதமரின் தமிழ் ட்வீட் வைரல்..!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய தமிழ் ட்வீட் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!" என்று தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இன்று பிற்பகலில் மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்டப் பேரணியில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பங்கேற்கிறார்.
தனது பதிவில் ஆளும் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ள பிரதமர், "ஊழல் மிகுந்த திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அதிமுக, அமமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வலிமையான கூட்டணியைக் கட்டமைத்துள்ள நிலையில், பிரதமரின் இந்த வருகை எதிர்க்கட்சிகளுக்கு ஒரு முக்கிய அரசியல் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் கடந்த கால சாதனைகள் மற்றும் மாநில மக்களின் நீண்டகால விருப்பங்களை நிறைவேற்றுவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி காட்டி வரும் அர்ப்பணிப்பு, தமிழக மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் பேரணியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் பிரதமர் ஒரே மேடையில் தோன்றுவது, திமுகவுக்கு எதிரான ஒரு கூட்டணியின்' பலத்தை பறைசாற்றுவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva