ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை.. 6 சிலிண்டர்கள் அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாதது ஏன்? பொதுமக்கள் அதிருப்தி...
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, 2026-2027 நிதியாண்டிற்கான திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு மற்றும் 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம் பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் இருமடங்காக உயர்ந்துள்ளதால் நிதி ஆதாரம் குறைவாக இருப்பதாகவும், நிதியை சீரமைக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.
ஏற்கனவே 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-இல் தொடங்க உள்ளது.
இன்றைய பட்ஜெட்டில் திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலைக்கவசத்துடன் கூடிய மிதிவண்டி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வாக்குறுதிகளான வேலையில்லா பட்டதாரிகளுக்கான நிதியுதவி மற்றும் உரிமைத்தொகை உயர்வு தாமதமாவதால் பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
Edited by Siva
