1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Webdunia
Last Updated : புதன், 6 மே 2026 (08:51 IST)

ஆட்சி மாறுவதால் பிளஸ் 2 முடிவுகள் தாமதமா? புதிய ஆட்சி ஒப்புதல் தர வேண்டுமா?

ஆட்சி மாறுவதால் பிளஸ் 2 முடிவுகள் தாமதமா? புதிய ஆட்சி ஒப்புதல் தர வேண்டுமா?
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மே 8-ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என மாணவர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போதுள்ள அரசியல் சூழல் இதற்கு தடையாக அமைந்துள்ளது.
 
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை நடைபெற்ற இத்தேர்வை சுமார் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை முடிவடைந்து, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் கிட்டத்தட்ட நிறைவு பெற்றுள்ளன. இருப்பினும், தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
 
தமிழகத்தில் தற்போது புதிய ஆட்சி அமைவது தொடர்பான அரசியல் நகர்வுகள் நடைபெற்று வருவதால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், முடிவுகள் தயார் நிலையில் இருந்தாலும், புதிய அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் ஒப்புதலுக்கு பிறகே தேதியை இறுதி செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். 
 
இதனால் திட்டமிட்டபடி மே 8-ஆம் தேதி முடிவுகள் வெளியாக வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இந்த தாமதம் உயர்கல்வி சேர்க்கைக்கு தயாராகி வரும் மாணவர்களிடையே ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva